Written by 6:02 am கதை

தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே!

அவளை நான் காதலித்தது பிடித்தமான விசயமாகத்தானிருந்தது.

ஒரு நிமிடம் பொறுங்கள்… நான் புகையை ஆழ்ந்து உள் இழுக்க வேண்டும். அவளைப்பற்றி நினைக்கும் போது என்னால் அமைதியாயிருக்கமுடிவதில்லை.

புகை உள்ளே சென்று என்னவோ செய்யதான் செய்கிறது. ஆனாலும் பரவாயில்லை நான் அதைச் சொல்கிறேன்.

ஒரு டிசம்பர் இரவு கண்களுக்குள்ளே எரிச்சல், உடல் வெப்பத்தால் தகிக்கிறது. அது ஒரு ஸ்டார் ஹோட்டல். கம்பியூட்டர்களோடு நானும் என் சகாவும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றோம். உள்ளேயே புகைக்கும் சுதந்திரம் உண்டு என்பதால் புகைத்து தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

மணி என்ன இருக்கும் புருஸ்..

என்னப்பா கம்யூட்டர்லதானே இருக்கா அதிலேயே பாரேன்.

ஸாரிப்பா மண்ட வேலை செய்யலன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இதுக்க மேல இருந்தா தப்பு தப்பாதான் நான் டைப் பண்ணுவேன்.

அப்பசரி எந்திரிச்சிருவமா? அப்பாடாவென்று கம்பியூட்டர்களை உறக்கத்தில் தள்ளிவிட்டு எழுந்து நின்ற நான் கைகளிரண்டையும் நீட்டி முறித்து கொட்டாவி விட்டேனே பார்க்க வேண்டும்.

என்ன இன்னைக்கு ஐயா ரொம்ப டயர்டாகிவிட்டீரோ? என்னைப்பார்த்து புருஸ் கேட்ட கேள்விக்கு சோம்பலாய் தலையாட்டிய நான் அறைக் கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தேன்.

பியூன் தயக்கத்தோடு உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளவா சங்கர் என்ன விசயம் சொல்லு புருஸ்தான் கேட்டான்.

ஒரு பொண்ணு வந்திருக்கு சார்..

பொண்ணா..? ஏற்கனவே ரும் ரிசர்வ் செய்திருப்பாங்களாயிருக்கும் ரிசப்சனில பார்த்துவிடவேண்டியதுதான சங்கர். எங்ககிட்ட வந்து நிக்கிற..? இது நான்தான்.

அந்த பொண்ணு நம்ம ஹோட்டல்ல வேலைக்கு வந்திருக்காம். ரிசப்சன்லதான் சொன்னாங்க.. சார்ட்ட கேட்டுட்டு வான்னு அதான்… இழுத்தான்.

சரி சரி வரச் சொல்லு சொன்ன புருஸ் என்னை பாவமாய் பார்த்தான் இப்போது அவன் கண்கள் துக்கத்திற்காய் சிவந்திருந்தது எனக்கு தெரிந்தது. எழும்பிய நாங்கள் அப்படியே இருந்துவிட்டோம்.

மே ஐ கமின் சார்? கதவு பக்கமிருந்து சத்தம் எஸ் கம் இன் குரல் ஒரு மாதிரி கரகரத்துதான் தொண்டைக்குள்ளிருந்து வெளிவந்தது. எல்லாம் சிகரெட் பாக்கெட்கள் செய்த வேலை.

குட் மார்னிங் சார். ஒ.. அடுத்தநாளை ஞாபகப் படுத்துகின்றா£ள். பரவாயில்லை… வணக்கம் உட்காருங்க. இருக்கையை காட்டினான் புருஸ். புருஸைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தாள்.

சார் என்பெயர் நிஷாந்தினி. தஞ்சையில் கேட்டரிங்காலேஜ்ல் படித்துக் கொண்டிருக்கின்றேன். ஒருமாதம் பயிற்சிக்காக என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதோ பெர்மிசன் லெட்டர். என்று லெட்டர் பேடில் எழுதியிருந்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.

வாங்கிய புருஸ் அதை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி மிஸ் நிஷாந்தினி அதுக்கு இந்த நேரத்தில வந்திருக்கின்றீங்க..? தயக்கத்தோடு என்னைப் பார்த்தவள் பஸ் சரியா கிடைக்கவில்லை சார்.. இந்த பஸ்ஸை விட்டால் நாளை காலையில் என்னால சரியான சமயத்திற்கு வந்து சேரமுடியாது சார். அதனாலதான் கிளம்பி வந்துவிட்டேன்..

காலம் தவறாமையைக் கடைபிடிக்கிறாள். பரவாயில்லை.. ஆனா அடிக்கடி சார் சார்ங்ற வார்த்தையை போடுறாள். தைரியமான பொண்ணுதான். உனக்கு சொந்த ஊரே தஞ்சைதானா? இல்லசார் திருநெல்வேலி… தஞ்சையில தங்கி படிக்கிறேன்..

மீண்டும் சார்… சட்சட்டென்று தயங்காமல் பதில்தருகிறாள். தெளிவானவளாக இருக்க வேண்டும். கடிதத்திலிருந்து தலை நிமிர்ந்த புருஸ். ரும் தரச் சொல்கிறேன். நீங்க முதலில் து£ங்கி ஓய்வெடுங்க நாளை காலையில் எல்லாம் பேசிக்கொள்ளலாம்.

அவளை முதன் முதலில் அப்படிதான் சந்தித்தேன். நானும் புருஸும் மேனேஜர்கள். எங்களுக்குள் நல்ல நட்பு. முக்கியமாக இருவருமே புகை போக்கிகளாகத்தானிருந்தோம். திடீரென்று ஒரு வாரம் சுத்தமாக புகை பிடிக்கமாட்டோம். பின் மீண்டும் ஆரம்பித்துவிடுவோம். எப்போதும் வேலை நேரத்தில் சேர்ந்தே திரிவதுதான் எங்கள் வாடிக்கை. சத்தியமாக சொல்கிறேன் அந்த சமயத்தில எனக்கு அவ மேல காதல்லாம் கிடையாது. ஆனா நான் அதுக்கபிறகு அவளை எப்போ காதலிக்க ஆரம்பித்தேன்னு ஞாபகமேயில்லை. இன்னும் என்னால அதை அனுமானிக்ககூட முடியல.

அத நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருக்கு. அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் நேர்த்தியாக என்னை கவர்ந்து கொண்டேயிருந்தது. நான் எப்போதாவது எழுதுவது உண்டு. பெரிய அளவில் எழுதாவிட்டாலும் ஓரளவு எழுதும் பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். எப்போதுமே துவக்கத்தில் கவிதை காதலிலிருந்தே கைவசம் வரும் என்று நிறைய பேர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். ஆனா என் கவிதைகள் என்னுடைய வெப்ராளங்களை துடைப்பதற்காகவே எழுதப்பட்டவைகள். சத்தியமா சொல்றேன் நான் கவிதை எழுத இவ்வளவு நேரம் எடுத்ததே கிடையாது. அவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டு அவளைபத்தி கவிதை எழுத உக்காந்துகிட்டு இருந்திருக்கேன். கடைசில கஷ்டபட்டுகூட ஒரு நாலுவரி அவளைப் பத்தி எழுத முடியல. எழுதுனதெல்லாம் எனக்கு திருப்தி இல்லாம கசக்கி கீழ போட்டு போட்டு என்னச் சுத்தி ஒரே காகிதகவிதை குப்பை. கடைசியில நான் காதல் கவிதை எழுதல.. எனக்கு கேவலமாட்டுதானிருந்து.. என்ன செய்ய… ஆனா மனசுக்குள்ள அவ நினைப்புலதானிருக்கேன்னுமட்டும் நல்லாத்தெரியுது.

அன்னைக்கும் இப்படிதான் ஒரேயடியா சிகரெட்ட புகைச்சு புகைச்சு தள்ளிட்டேன். ஒரு நிமிசம். இப்ப எனக்கு விரல் நடுங்குதுன்னு நினைக்கிறேன். நான் கொஞ்சம் என்ன ஆசுவாசப்படுத்திக்கணும் இல்லன்னா என்னால தொடர்ந்து சொல்லமுடியாம போயிரும். இப்பெல்லாம் பேசிக்கிட்டு இருக்கும்போது அடிக்கடி உடம்பெல்லாம் நடுங்க தொடங்கிடுது. என்னால ஒன்னும் செய்யமுடியாது. காக்கா வலிப்பு வரக்கூடிய சமயத்தில கையில இரும்ப கொடுத்து ஒரு நம்பிக்கையை உருவாக்குவாங்க பாத்தியளா..? அதைப்போலதான் நானும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினா சரியாப்போயிடும்னு நம்பிக்கையை வைச்சுக்கிட்டுத் திரியேன். ….

அப்பாடா இப்ப கொஞ்சம் பரவாயில்ல. சரி விசயத்துக்கு வாரேன். அவளைப்பத்திய பயோடேட்டா என்கைலதானிருந்துச்சு. அதை எடுத்து அடிக்கடி பார்த்துக்குவேன். என்னவிட ஒரு வயசு கூடுனவ.. ஆனா சின்னப்பிள்ள போலயிருப்பா கட்டையா அழகா எனக்கு பிடிச்சதுபோல அவ பார்வைகூட ரொம்ப நேராயிருக்கும். ஆனாலும் அவளப் பத்தி கவிதை எழுதமுடியலங்கிறது எனக்கு பெரிய ஏக்கமாட்டுதானிருந்து. வேற கவிதைகளையும் என்னால எழுத முடியல.. படைப்பாற்றல் என்ன புறக்கணிக்குதோன்னு எனக்கு பயம். அதே சமயத்தில அவ நினைப்புதான் மனசு பூரா நெருக்கியடிச்சுகிட்டு கிடக்கு.

ம்.. அப்புறம் கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் வருடபிறப்ப ஹோட்டல்ல கொண்டாடினோம். அன்னைக்கு எல்லோரும் எல்லோருக்கும் கைகுலுக்கி வாழ்த்து சொல்லிக்கிட்டாங்க. நான் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லனும்ல.. இல்லன்னா நல்லாயிருக்காது. வேற வழியே இல்லாம எல்லா பணியாளர்களுக்கும் கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறேன். எல்லார்க்க முகத்திலயும் ஒரே சந்தோசம். அப்பவும் மணி ராத்திரி 12.10 போலதானிருக்கும். எங்க ஹோட்டல்ல ஏற்கனவே பெண் பணியாளர்கள் உண்டு. அவர்களும் வரிசையில நிற்கிறாங்க. கைகுலுக்கி வாழ்த்திட்டு வந்திட்டுயிருக்கேன் திடீர்னு அவ நிக்கா.. அதுவும் இதர பெண் பணியாளர்களுக்க இடையில நிக்கா.

என்னால டக்குன்னு ஒண்ணும் கைநீட்ட முடியல, அப்படியே உறைஞ்சுதான்போயிட்டனோ என்னதோ.. ஆனா எனக்கு நல்லா ஞாபகமிருக்கு அவகிட்ட கைகுலுக்கதுக்க முன்னால என் கைய யாரும் பாக்காம என் சட்டையில தொடைச்சுகிட்டது. அப்போதான் முதல்முதல்ல அவளை தொடுறேன். அந்த தொடுதல் அப்படியே எனக்குள்ள போய் மெதுவா பதியுது. ஏதோ முகர்றதுபோல நான் காத்த ஆழ்ந்து இழுக்கிறேன். திடீர்னு பாக்கிறேன் அவளை அடுத்து நின்றவள் முன் நிற்கிறேன். எப்போது கைகுலுக்கி முடித்து அவளைவிட்டு நகர்ந்தேன்னு தெரியல. சை.. இப்ப பாத்து என் செல்போன் அடிக்காதான்னு ஏங்குறேன். அவ கைபட்ட இடத்த அழிக்கதுக்ன்னு இன்னும் இரண்டு முணு பெண்கள் நின்றுகிட்டுயிருக்காங்க. ஆனா செல்போன் அடிக்கல… அதுக்கப்பிறகு என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஞாபகமில்லை. காலையில புருஸ்தான் வந்து எழுப்பினான். திரும்ப திரும்ப நடந்தத ஞாபகப்படுத்தி பாத்துகிட்டு அவகிட்ட காதலிக்கத சொல்லனுமேன்னு எனக்கு ஒரே யோசனை.

இதுக்க இடையில நம்ம பிரண்டு ஒருத்தருக்கு கல்யாணம். அதுவும் காதல் கல்யாணம், எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியிலதான் அவங்க கல்யாணம் நடக்கவேண்டியதாகிபோச்சு, நான் முழுக்க முழுக்க அவங்க கூடவே ஒரு பத்துநாளிருக்க வேண்டியதாயிட்டுது. அப்புறம் நாளைக்கு வேலைக்கு போகலாம்னு போன்ல ஆபீசுக்கு பேசினேன். புருஸ்தான் எடுத்தான். வேலையெல்லாம் எப்படிபோயிட்டுயிருக்குது பிரச்சனையில்லலா?.. ஒரு பிரச்சனையும் இல்ல நீ எப்ப வரபோரா?.. நாளைக்கு வந்துடுவேன்.

சரி நிஷாந்தினி இன்னைக்கு ஊருக்கு போறாங்களாம். எனக்குள்ள டக்குன்னு ஒரு பாரம் அமுக்கியடிச்சு. பேச முடியல… என்ன ஆச்சு திடீர்னு கிளம்புறா..? வலியிழந்து போய் என்னுடைய குரல்.

காலேஜ்லயிருந்து நேத்து பேசியிருந்தாங்க முக்கியமான செமினார் இருக்காம் அதான். திரும்பவும் அனுப்புவாங்களான்னு கேட்டியா நீ..? கேட்டேன்பா அதுக்கு இல்ல இனிமே அனுப்பமாட்டோம்னு சொல்லிட்டாங்க. நொறுங்கிதான் போனேன். கீழவிழ தொங்கிட்டு கிடக்ககூடிய காஞ்ச பனமட்ட போடக்கூடிய சத்தம்போல நெஞ்சுக்குள்ளயிருந்து எழும்பி முச்ச அடைச்சுக்கிட்டு வந்துச்சு. சரி எப்படி போகுதாம் அந்த பொண்ணு…? சாயங்கால டிரெய்ன்லதான்..?

உனக்க வேலயயும் நான் இழுத்து போட்டு செய்திட்டு இருக்கேன் நீ சாவகாசமாட்டு போன்ல கேள்வி கேட்டுட்டு இரு. நாளைக்கு வா எல்லாத்தையும் பேசிக்கலாம். வைக்கட்டான்னு கேட்டுட்டு வைச்சிட்டான்.

என்னால ஒண்ணுமே சொல்ல முடியவில்லை. நாகர்கோவில் இரயில்வே ஸ்டேசன் வழியாத்தானே எந்த ட்ரெயினும் போக முடியும். அரக்க பரக்க பைக்கில் ஏறியிருந்ததுதான் எனக்கு தெரியும். ஸடேசனுக்குள்ள நொண்டிகிட்டே நிற்கிறேன். இரயில் ஒன்று புறப்படத் தயாராய் சத்தம்போட ஆரம்பித்தது. ஒவ்வொரு பெட்டியாய் ஒரு பசித்த கிழட்டு பிச்சைக்காரனைப்போல ஆவலாய் பார்த்துக் கொண்டே திரிகிறேன். மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது டிரெயின். வேகமாய் நொண்டிக்கொண்டே ஒவ்வொரு பெட்டியாய்… போய்கொண்டேயிருக்கிறது வண்டி. முடிந்து விட்டன பெட்டிகள். திரும்பிப் பார்க்கிறேன். சத்தம் போட்டுக்கொண்டே டிரெயின் போய்கொண்டிருக்கின்றது. அதன் இறுதி பெட்டியின் பெருக்கல் குறி கண்ணில் பட்டுத் தெறிக்கிறது.

நீர் நிறைந்த கண்களில் ஒன்றுமே தெரியவில்லை. நீண்டு நெடியதாய் கிடக்கும் தண்டவாளத்தில் வண்டிச்சக்கரம் உரசிய சூடு மிதக்கிறது. இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அ… அவள்தான் அவளேதான். பக்கத்தில் நிற்பது என்னைப் போலவேயிருக்கின்றது நான்தானோ அட நான்தான். பதறிபோய் கேட்கிறாள் காலில் என்ன ஆச்சு..? சூடான கண்ணீர் உதிர்கிறது. நீண்டு நெடியதாய் கிடக்கின்றன தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே…
……………………………….

இரா. அரிகரசுதன், (அனலி, ஆகஸ்ட் 2006 இதழில் வெளியானது)

Visited 6 times, 1 visit(s) today
Close
Translate »