Written by 5:54 am கவிதை

இது வலசைப் பயணம் அல்ல

உணவுக்காக இறங்கிக் கொண்டிருந்தேன்
ஈரம்போன வாழையென எதிர் பட்டார்
வளாகத்தின் வாயிற் காவலர்
 
“உணவு முடிந்ததா?”
“ஆமாம். இன்றைக்கு போயிருங்க”,
ஏன்! என்ன ஆச்சு?
“இங்க தங்கக்கூடாது,”
 
நிறுத்தமும் இலக்கும் இல்லாத
பயணத்தில்
தோழனின் அறை
 
வங்கிக் கடனில் படித்தவன்
சம்பளத்தை மனம்வந்தால் பிச்சையிடும்
தனியார்க் கல்லூரியின் ஆசிரியன்
 
மதிப்பூட்டப்பட்ட காகிதத்தை
கைகளில் திணித்து
வேலைக்குச் சென்றிருந்தான்
“இங்கேயே தங்கு, பார்த்துக் கொள்ளலாம்”
உள்ளங்கையைத் தொட்டிருந்தான்
 
ஒருதோசை அல்லது இரண்டு
இட்டலியோடு வயிற்றை மூடுபவரின்
இலையில் உமிழும் கண்களையும்
கால்களையும் கொண்ட உணவுக்கடை
 
கல்லாவில் நின்றுக் கொண்டிருந்தது
குழந்தை
 
“அப்பா என்னை தூக்கு”
கொஞ்சி நீட்டியது கரங்களை
“இன்னும் இன்னும்”
சாயம் வற்றியிருந்த உத்திரத்தை
தொட்டு சிரித்தது
 
என்ன செய்வது தோழா?
அவசர வேலை,
வேறெங்கோ ஓர் இடத்தில்
இன்னொருநாளில்
கட்டாயம் சந்திப்பேன்.
 
……………………….. இரா. அரிகரசுதன், 18.09.2013
Visited 10 times, 1 visit(s) today
Close
Translate »