Written by 5:37 am கவிதை

கொக்கே கேளாய்

கொக்கே கேளாய்..
வடக்கிருந்து வருகிறாய் நீ..
 
ஆற்றின் காலை
சாலைகளென்றாக்கி
குளத்தின் கரையை
ஒடுக்கி புதுக்கி
விளக்குகள் நட்டும்
ஓடுகள் பதிந்தும்
மினுங்கும் பாதைகள் கண்டவர்
மிடுக்கு நகரை செய்தனர் கண்டாய்
 
நன்செய்யும் புன்செய்யும்
நடந்த திசையெங்கும்
மிஞ்சியது எஞ்சியது
குப்பைசெய் நிலமே
 
முளைத்தன வீடுகள் மாடிகள்
விரைந்தே இரைந்தன
மோட்டார் பம்புகள்
 
நன்னீர் கிணறுகள்
தூர்ந்தன மாறின
கழிவறை குண்டுகள்
என்றே ஆகின
 
கொக்கே கேளாய்..
வடக்கிருந்து வருகிறாய் நீ..
 
அப்பா தோண்டிய கிணற்றை
பங்காய் பிரித்தோம்
வடக்காய் தெக்காய்
கட்டிய வீட்டில்
அப்பாவாய் நின்றது
கிணறே.. நீரே…
 
அவ்வாறே இரைத்த நீரோடு
மனைவியும் மக்களும்
அண்ணனும் தம்பியும்
ரேசன் அரிசியை
சமைத்து உண்கையில்
 
கொக்கே கேளாய்..
வடக்கிருந்து வருகிறாய் நீ..
 
கிணற்றுக்கு வரிகட்ட
நின்ற வரிசையைக் கண்டதாய் சொல்கிறாய்
அரசனொருவன் உண்டென்றும் சொல்கிறாய்
 
வாழ்வென்ன கொக்கே
வழியென்ன கொக்கே
 
நீர் என்றால் என்ன?
யார் சொல்வார் கொக்கே
 
நீர்ப்பழி சுமந்தால்?
சொல் உண்டு கொக்கே
 
ஆயிரம் சென்மம் அழுதேபுரண்டாலும்
தீராது தீராது தீராதே போகும்.
 
………………….
இரா. அரிகரசுதன், 06.07.2022
Visited 5 times, 1 visit(s) today
Close
Translate »