Written by 5:14 am கவிதை

கொலையுண்ட ஆசிரியர்களின் ஊர்வலம்

நகரத்தின் இடுக்குகளில்
வாழும் ஆசிரியர்கள்,
இறப்பே இல்லாத
கரப்பான் பூச்சிகள்
அவர்கள்!
 
எரிமலையைத் தின்பவர்கள்.
கண்டங்கள் தாண்டி வெடிக்கும்
எறிகணைகளைச் அவர்களின்
வயிற்றுக்குள் அடித்து வைத்திருக்கிறார்கள்
 
ஆயினும் என்ன
கல்வி முதலாளிகளின்
சுருக்குக்கயிற்றுகளை
“டை”களாகவும்
பாறாங்கற்களை
“சூ”களாகவும் அணிந்து
திரிபவர்கள்
 
பால்சுரக்கும் கனத்த மார்பகங்களை
சுமந்து
கழிவறைகளில் பீச்சிவிடுபவர்கள்
 
ஓய்ந்திருக்க இருக்கையும்
யோசித்திருக்க
நேரமும்
செய்திருக்க செயல்களும்
பிடுங்கப்பட்டவர்கள்
 
IQAC, NAAC, NIRF
போன்றவைகளால்
தூங்க கேட்கும் இமைகளைக்
உறையச் செய்தவர்கள்
 
கற்றத்தை சொல்லாதும்
புதியன புகுத்தாதும்
விடுதலையைப் பாடாதும்
ஏங்கி ஊதிய
அவர்களின் உடல்களை
அவர்களே சுமந்து
நடந்தும்
 
சனிக்கிழமைகளை
பறிகொடுத்தும்
ஞாயிற்றுகிழமைகளில்
உழன்றும்
வானம் பார்த்து வாழ்பவர்கள்
 
அவர்களின் கொலையுண்ட உடல்களில்
கட்டப்பட்ட கல்விக் கட்டிடங்களில்
எஞ்சி இருக்கும்
ஈரம்
இரத்தம்தான் அது
சாட்சிச்சொல்லும் தவறாது.
 
இரக்கமற்று சொல்லாதீர்
மானிடரே
ஒரு சொல்
“ஆசிரியர் தின வாழ்த்துகள்”
நான் சாபத்தை பரிசளித்திடுவேன்.

………………………………..

இரா. அரிகரசுதன், 05.09.2023/காலை
Visited 10 times, 1 visit(s) today
Close
Translate »