Written by 5:56 am கவிதை • One Comment

போர்ச் செய்திகள் கவியும் இவ்விரவை கழிப்பதெப்படி?

உள்ளங்கையில் இருக்கும்
சமாதானத்தை
ஒரு கடுவன் பூனையைப்போல்
உருட்டி விளையாடுவது
நல்லதல்ல..
 
போர் ஒரு பண்டம்.
பண்டங்களை விற்கும்
பண்டம்.
 
பனிக்காலத் தசையுள்
ஓடும் இரத்த
வெதுவெதுப்போடு
பொதிந்திருக்கிறது, அமைதி.
 
அது அப்படி,
இது இப்படி,
அன்று அப்படி நடந்ததால்..
நடக்காததால்..
 
எல்லாம் சரிதான்..
 
ஏறெடுத்துப் பாருங்கள்
ஒரு நல்ல விதை
உள்ளங்கையில்
துடிப்பு காட்டுகிறது.
 
நீ ஒரு கரடியாகவே
இருப்பதில் அல்லது உன் கரடி
எனும் பெயரை அப்படியே வைத்திருப்பதில்
ஒன்றும் இல்லை.
 
ஒழுகவிடாதே.
 
இரண்டு காதுகளைக் கொண்ட
ஓ.. கரடியே..!
 
நியாயத் தீர்ப்புகளேயாயினும்
உண்மையின் பிசுபிசுப்பை
எங்கே ஒளித்து வைப்பது!
 
சமாதானத்தை
பேச்சுவார்த்தையை
மீண்டும் மீண்டும்
ஒளிக்கீற்றுகளாக மாற்றி மாற்றி
தீற்றும்
ஒரு புத்த கரடியாய்
மாறிதான் பாரேன்…!
 
காற்றில் ஒரு மெல்லிறகாய்
காலங்கள் கடந்தும்
பறக்கலாம்!!
 
அதுவே பண்டமுமாம்!
 
பராபரம்.
 
………………………
இரா. அரிகரசுதன், 26.02.2022
Visited 20 times, 1 visit(s) today
Close
Translate »