Written by 5:24 am கவிதை

வேட்டையாடப்படாத கரடிகள்

தினம் தினம் கரடிகளை எதிர்கொள்ள
தயாராவது, மூளையைக்
கழற்றி வைத்துவிடுது என்பதே ஆகும்.
 
பருத்தக்கரடியின்
முன் அசையாமல் நிற்பது,
அது அடித்துப்பார்க்கும்போதும்
வலிக்காமல் நிற்பது,
அப்படித்தான் பழக்கம்.
 
அதன் பற்களும் நகங்களும்
வளர்ந்து கொண்டே செல்கின்றன,
கூர்மைகொண்டு.
 
இது அன்றாடம்தான்,
ஆனாலும்
பழகமாட்டேன் என்கிறது.
 
செம்மண்ணால் ஆன உடல்
இருக்கும் மட்டும்
எப்படிப் பழகும்?
 
இன்று எப்படியும் கரடியை
தொடவேண்டியதுதான்…
சூடுபடுத்தியக் கைவிரல்களை
சாணைபிடித்துக் கொண்டேன்
இதுவும் அன்றாடம்தான்.
 
இம்முறை
அப்படியே அதன் நாக்கை
கொழுத்தி எடுக்கவேண்டும்
மூளையையும் சேர்த்து.
 
நண்பன் அடிக்கடி சொல்வான்,
“நம்மூரில் இருக்கும்
புலிக்குத்தி கல்லுக்கருகில்
ஒரு கரடிக்குத்தி கல் வைப்பேன்” என்று.
 
தீட்டிய விரல்களை
பதம் பார்த்த கையோடு
காலைப் புறப்பாடு தயார்.
 
மகள் சொன்னாள்
“அப்பா நில்லுங்க.
உங்களுக்கு ஒரு
உம்மா தருகின்றேன்.”
 
மகன் சொன்னான்,
“நானும் தருவேன்.”
 
ஒரே கன்னத்தில் இருவரும்
பதிந்தார்கள்.

வெறுங்குழம்பின் வாசம்.

உங்களுக்குத் தெரியும் அல்லவா?
அப்பாக்களின் உடலில்

உயிரிருக்குமிடம் கன்னம் என்பது!

ஐய்யா..
மக்களிருவரும்
போட்டிபோட்டுக் கொண்டு ஆடினர்,
கைகளின் எச்சில் பருக்கைகளோடு,

வாசல் நடையிலேயே குதித்தனர்.

மனைவி சொன்னாள்,
“ஒங்களுக்கு அப்படி என்னதான்
மறதியோ தெரியல
சாப்பாட்டுக்கூடையை
எடுக்காமலே கிழம்பிடுறீங்க…”

…………………………

இரா. அரிகரசுதன்
காலை மணி 10.53, 02.09.2023, பீளமேடு, கோயம்புத்தூர்.
Visited 8 times, 1 visit(s) today
Close
Translate »