Written by 4:41 am கவிதை

ஆசிரியன் விழித்திருக்கிறான்

பிந்திய இரவில்
பாடத் தயாரிப்பில் இருக்கையில்
பதட்டத்தைத் தருகின்றன
செல்பேசி அழைப்புகள்

எங்கோ
வண்டியில் அடிபட்டோ
அல்லது
துயரங்களின் நெரிபட்டோ
இளையவர்கள்
தவறிவிடுகிறார்கள்

அவர்கள்
படித்த காலங்கள்
சிரிப்புகள்
தட்டிக்கொடுத்த
தருணங்கள்
கூட்டுச்செயல்பாடுகள்
வாழ்க்கை
அரசியல்
எதிர்காலம்
என
பசியாறிய பொழுதுகள்
அடர்ந்த இரவுக்குள்ளிருந்து
சில தனித்த பனைமரங்களென
வெளியேறி நின்கின்றன
 
குரல்ஒலிகளும்
இரத்தம் இயங்கிக்கொண்டிருந்த
அந்தஉடல்களின்
வெம்மையும்
பக்கத்தில் வந்தமர்ந்துகொண்டு
காத்திருக்கின்றன.

இன்னும் என்ன?
விடைபெறுவதற்கான
அந்த கட்டிபிடிப்புதான் மிச்சம்.

என்னசொல்லி
விடையளிக்க?
“படித்தோரே,
ஏன் அவசரப்பட்டீர்” என
நாலு திட்டு திட்டலாமா..

அல்லது
“நல்லதுதான்” என
நாமே நம்மை சபிக்கலாமா..

மிச்சமிருக்கும் இரவோ
ஒரு பாறாங்கல்லாக
திரண்டிருக்கின்றது,

உள்ளிருந்து
ஒலிக்கின்றன குரல்கள்…

“கவலையை விடுங்கசார்
செஞ்சிடுறோம்… “

—————————–
இரா. அரிகரசுதன், 07.09.2023, இரவு
(என்னிடம் எம் எஸ் சி படித்த மாணவன் ஒருவனின் இறப்புச் செய்தி கேட்டு, மனம் கொண்ட பாடு)
Visited 18 times, 1 visit(s) today
Close
Translate »