Written by 5:52 am கவிதை

அவளில்லாத நாட்களில்

முன்னும் பார்த்திருக்கிறேன்
இப்படி ஓடியதில்லை
பதறியதுமில்லை
 
தெருவில் வளையவரும்
நாயைக் கண்டுதான்
அவளுக்கு பயம்
“பைரவா” மந்திரம்
துணை என்பாள்
 
நாய் வளர்த்ததில்லை
சோறும் வைத்ததில்லை
 
அவளுக்கு பிள்ளைக்கு எனக்கு
பக்கத்து வீட்டினருக்கு
அவர்களின் கார்களுக்கு
எல்லோருக்கும் காவல்
சொல்லி சொல்லி ஆற்றியிருப்பேன்
 
சொந்த கார் வைத்திருப்பவர்கள்
நாயையும் வைத்திருக்கிறார்கள்
இரண்டையும் கழுவி
அருமையாய் வைத்திருப்பார்கள்
 
வளர்ப்போனிருக்கையில
எட்டிக் கடித்தது
சதைக்கொழுத்த நாய் ஒன்று
என்னை
 
பயந்துபோயிருந்தாள்
அவள்
 
கரப்பான்களை
பல்லிகளை அவள் திட்டுவாள்
அப்படித்தான் பராமரிப்பாள்
 
குழந்தை
அலறுகையில் சிலவற்றை
“பிள்ளையையா பயமுறுத்தா?”
கொல்லவும் செய்வாள்
எனக்காகவும் சிலசமயம்
 
சமையல் திண்டு
கழுவுப் பள்ளம்
குப்பைக்கூடை காய்கறிக்கூடை
ஆலாய்ப் பறக்கின்றன
கரப்பான்கள் பல்லிகள்
 
பசி எப்படி அடங்கும்
போக்கிடம் ஏது
பக்கத்து வீடுகளுக்கு போகுமா?
 
முன்னும் பார்த்திருக்கிறேன்
இப்படி ஓடியதில்லை
பதறியதுமில்லை
 
வயிறேறி உள்புரளும் பூனையை
கரப்பானால் என்ன செய்ய முடியும்
பல்லியாலும்தான்…
பாவமாயிருக்கிறது
 
………………………………………
இரா. அரிகரசுதன், 30.05.2019
Visited 7 times, 1 visit(s) today
Close
Translate »