Written by 5:49 am கவிதை

பேச்சுவார்த்தை எனும் கணத்தை அழைக்கத் தெரிந்தவர்களே

இரண்டு நாடுகளுக்கிடையிலான
யுத்தத்தில்
 
பணம்
ஆயுதங்கள்
பொருளாதார கட்டுப்பாடுகள்
பறக்கின்றன
கணைகளாக
 
அன்றாடச் சாலையில்
டாங்கியைப் பார்த்த
மக்களின் ஊர்த்தி
பீதிஅடைந்து நகருகையில்
 
கருவண்டை நசுக்கும்
பூட்ஸ்கால்களே என
டாங்கி ஏறிச்செல்வதை
மாடியிலிருந்தும் வீடுகளிலிருந்தும்
பார்த்துக் கொண்டிருக்கின்றது உலகம்
 
மீண்டும் மீண்டும் காட்டும்
தொலைக்காட்சிகளில்
வலைக்காட்சிகளில்
வீடியோகேம்
வடிவம் கொண்டிருக்கும்
அந்த போதை
 
கண்டங்கள் தாண்டி
படிகின்றது
 
ஊடகங்கள்
அறிவுசீவிகள்
சரி தவறு
தராசுகளை சுமக்கிறார்கள்
 
ஊழ்வினை உறுத்தும்
என்பவர்களும் உண்டு
 
யுத்தத்தை
நடத்தும் பார்வையாளர்கள்
நடத்துகிறார்கள்
 
தனித்து நிற்கிறோம் என்றும்
இடையில் எவர் வந்தாலும்
அவ்வளவுதான் என்றும்
புறப்பாடுகள்
 
சிறுத்தையின் வாயிலுருந்தும்
சிங்கத்தின் வாயிலிருந்தும்
பூக்களை விளையச்செய்து
பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்யும்
சிற்பிகளும் கவிஞர்களும்
ஒருக்கழித்து படுத்துக்கொள்கிறார்கள்
கடற்குச்சியெடுத்து
வானத்தை வரைபவர்கள்
மட்டும்
 
உட்கார்ந்து பேசுவதற்கான
ஓர் இடத்தை சுமந்து உலவுகிறார்கள்
திரு புதின் அவர்களே
புறாக்களைப் பற்றி
என்ன நினைக்கிறீர்?
 
அணுவையும்
ஆயுதத்தையும் அறிந்தப்
பட்சிகளே அவை
 
தற்போது
உன்தோட்டத்திலேயே
மாடம் கொண்டிருக்கின்றன
 
கண்டுகொள் அப்பனே
 
நாங்கள் உன்னை வானத்தில்
வரைவோம்.
 
………….
இரா.அரிகரசுதன், 27.02.2022
Visited 8 times, 1 visit(s) today
Close
Translate »