Written by 4:17 am கவிதை

விற்பனைப் பண்டம்

பகலையும் இருளாக்கிச்
சுவைத்துக் கொண்டிருந்தது காலம்
சபிக்கப்பட்டவர்களை.

விடியலை நோக்கிக்
காத்திருந்தவர்களுக்கு
நூற்றாண்டுகளுக்குப் பிறகு
ஒளிக் கீற்றென
வந்துற்றார் கடவுள்.

ஏதிலிகள் மீது விழும்
கசையடிகளைத்
தன்மீது வாங்கத் தொடங்கியதிலிருந்துதான்
கண்ணீரால் எழுததொடங்கினார்கள்
கடவுளென.

பாவிகளை இரட்சிப்பீரென
கையேந்தி மன்றாடி
நிற்கிறார்கள்
மந்தை மந்தையாய்.

பிரார்த்தனை மீது
நம்பிக்கையற்ற அவனும்
தூரத்திலிருந்து
இரசிக்கத் தொடங்கியிருந்தான்.

நம்பிக்கைத் துளிர்க்கச் செய்யும்
அவ்வொளிக்கீற்றை நோக்கி
தாளாத அன்பால் தொடுத்த
மாலையை எடுத்து
கனவுகளோடுப் புறப்பட்டான்
தன் சிசுவில் ஒன்றையும்
நெஞ்சோடு அணைத்து.

வியர்வையில் நனைந்து
மன்றத்தின் மீதேறிப் பார்க்க
திக்கெங்கும்
மந்தைகள் மந்தைகள்
மந்தைகளாய்.

நெரிசலில் சிக்கி
அயர்ந்த முகத்துடன்
வியர்வையில் குளித்து
உயிரை விழிகளில் தேக்கி
சுற்றியிருந்த சீடர்கள்
விற்பதை அறியாது
அமர்ந்திருந்தார் கடவுள்.

தூரத்திலிருந்தே தரிசிக்கலாமென
கீழிறங்க
மாலையிலிருந்து உதிர்ந்த பூ
கடவுளின் மடியில் விழுந்த போதுதான்
அர்ச்சகர்கள்
தன் பசிக்கு விதை நெல்லை இடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று
அசரீரி கேட்டது.

——
சிவ.விஜயபாரதி

Visited 54 times, 1 visit(s) today
Close
Translate »