Written by 4:36 am கவிதை

காணவில்லை

சூரிய ஒளி வீசும்
ஒளிக்கற்றைகளின் இடையில்
உயர்ந்த மலை போல்
குவிந்து கிடக்கின்றன செங்கற்கள்

அமைதியை இழந்த முயல் ஒன்று
புல்வெளிகளில் தேடும்
அதி வேகத்தில் பரவுகிறது
நகரெங்கும் புழுதி

மறந்து போன கனவுகளில்
எதிரொலிக்கிறது மௌனம்.

துருப்பிடித்த இரும்பினைப்போல்
அவள் பிஞ்சுக்கைகள் முழுதும்
நீங்காது படிந்திருக்கிறது
கறை.

ஈஸ்டர் நாளின் இரவில்
உறங்காமல் தேடும் முட்டைகளைப்போல்
இந்தப் பாழடைந்த கட்டிடத்தின் குவியலில்
எதைத்தான் தேடுகிறாளோ!

காணாமல் போன நிம்மதியா
தொலைத்துவிட்ட அன்பையா
கிடைக்கப்பெறாத அன்னையா

சோர்ந்து போன
அவள் இரு தோள்களையும்
உலுக்கி மீண்டும் கேட்கிறேன்.

பாலை நிலத்தில்
வருடும் தென்றலைப்போல்
மெல்லிய புன்னகையுடன்.

தன் இடுப்பின் கீழ் தொலைந்து போன
இரு கால்களும்,
அதன் பாதங்கள் சூட்டிய காலணியும்,
தொலைத்த இடமென்று
இடிந்து போன கட்டிடத்தின்
குவியல் ஒன்றின் அடியில்
தன் பிஞ்சு விரலால் சுட்டிக்காட்டினாள்.

அச்சமயத்தில்,
என் தலை மேல் பறந்து செல்லும்
போர் விமானங்களின் பேரிரைச்சலில்
தொலைந்து போனது
என் மௌனம்.

இடிபாடுகளுக்கு அடியில்,
தொலைந்து போன அந்த கால்கள்
காலணிகளுடன் எட்டிப்பார்கின்றன
அதே மௌனத்துடன்.
……………………………………
– ஜி. ஏ. கௌதம்

Visited 28 times, 1 visit(s) today
Close
Translate »