Written by 4:27 pm கவிதை

சுடுகாட்டுப் பேரேடு

அப்போதெல்லாம்
பெயர்
எழுதியதும் உடல்
எரிந்துவிடும் சுடுகாட்டின்
பேரேடு அல்ல பூமி

அப்போதெல்லாம்
காட்டு
மரங்களின் நெற்றியில் யாரும்
இலக்கமிட்டிருக்கவில்லை
மேய்ச்சல்
விலங்குகளின் காதுகளில்
புவியிடங்காட்டி பொருத்தப்பட்டிருக்கவில்லை
காட்டுப் பிராணிகள்
ஊருக்குள் வந்து அரிசி
உண்டதில்லை
மானின் கொம்பு மானுக்கு
மட்டும் தேவைப்பட்டது
யானையின் தந்தம் யானைக்கு
காண்டாமிருகத்தின் கொம்பு
எதற்கு மனிதனுக்கு

ரூபஸ் இருவாச்சி இன்னும் கொஞ்ச நாளில் இல்லாமலாகும்
மரத்தேரை பாவம்
குரைக்கும் மான்களை நம் பிள்ளைகள்
பார்க்க முடியாது
சிவப்பு பாண்டா கரடியும்
மூர்லாண்ட் தட்டான் பூச்சியும்
தாஸ்மேனியப் புலியும் கூட

மரங்களை வெட்டி கூண்டு
செய்து கொண்டான்
உயிர்ச் சங்கிலியை அறுத்து
ஊறு செய்து கொண்டான்

மனிதனின் பேராசைக்கு நேர்ச்சைப் பலி
ஓசோனில் துவாரம்
உருகும் துருவங்கள்
ஏழு கடல்களை பருகி ஒரே
நாளில் பெய்யும் மேகங்கள்
நிலம் சரியும் மலைகள்
கோடி நட்சத்திரங்களை விழுங்கி
கொப்பளிக்கும் சூரியன்

அப்போது திணைகள் திரியவில்லை
பருவங்கள் இடம்பெயரவில்லை
கடிகாரங்கள் எப்போதும் சரியாக சுழன்றன
மூச்சுக் காற்றுபட்டால் மரணம் வருமென்ற கொள்ளைநோய் யாரையும் தனிமைப்படுத்தவில்லை

அப்போது
அந்தந்த பருவத்தின் கனிகளை விட
மாமருந்தில்லை
கொல்வதற்காகவே பிராணிகள்
வளர்க்கப் படவில்லை

ஆம்
அப்போதெல்லாம் மனிதனின்
பெயர்
எழுதியதும் உடல்
எரிந்துவிடும் சுடுகாட்டின்
பேரேடு அல்ல பூமி
……………………………………….

நேசமித்ரன்

Visited 31 times, 1 visit(s) today
Close
Translate »