உலகப் புகைப்பட நாளுக்காக (ஆகஸ்ட்டு 19) இந்துஸ்தான் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களை, மக்கள் வாழ்வை புகைப்பட பதிவுகளாக்குவதற்காக கோவை பேரூர் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.
 
மழை ஆசிர்வதித்த அன்னாளில் பேரூர் சிவன் கோவிலின் முன்னால் என்னிடம் யாசகம் வாங்கிய மனப்பிறழ்வோ அல்லவோ என சந்தேகிக்கும் ஓர் அம்மாவோடு நான் பேசிக்கொண்டிருந்த தருணத்தை எமது மாணவர்களுள் ஒருவரான அரவிந்த் புகைப்படமாக்கியிருந்தார்.
 
“தண்ணீர்தான் சாமி பலமானது. வாங்க நான் தண்ணீர் காட்டுறேன்” என பேரூர் நொய்யல் தடத்தை காட்டி நின்றார். தடத்தை சீர்செய்ய தோண்டிக்கொண்டிருந்தது பொக்லின்.
 
சின்ன தங்கமோ சின்ன பொன்னாளோதான் அவர் பெயராக இருக்க வேண்டும். இரண்டு மூன்று முறை அவர் பெயரை சொன்ன போதும் இறுதிச் சொல்லை வாய்க்குள் வழுகச் செய்துவிட்டதால் முறையாக கேட்கவில்லை. மீண்டும் கேட்பது அவருக்கு சங்கடத்தை தந்ததுபோலிருக்க நிறுத்திக் கொண்டேன்.
 
“எங்கம்மாவ போலவே நீ இருக்க. அப்படியே சிரிக்க. யம்ம்மா.. நீ அப்படியேதான் இருக்க. அம்மாவப் போலவேதான் நடக்கிற. செருப்பும் எங்க அம்மாவபோலவே போட்டிருக்க. அப்படியே இருக்கேம்மா.. ஐயோ..
 
எதுக்கு வந்திருக்கீங்க எல்லாரும். எதுக்கு போட்டோ எடுக்குறாங்க.. படிக்கவா..
தண்ணிதான் எல்லாம். யாருக்கு தெரியுது.
 
என்கூட போட்டா எடுத்துக்கிறியா?.
ஏம்மா இங்க வா சாமி… எங்கம்மா ஊரு மாயாறு. பண்ணாரிக்கு போயிருக்கிறீயா? அங்கயும் தண்ணீ இருக்கு. சக்திவாய்ந்தது.
 
ஏம்மா, கட்டாயம் போங்கச் சாமி. மனசுல நெனச்சிக்கிட்டே முங்கினா எல்லாம் நடக்கும். பலமான தண்ணீ சாமி. தண்ணீதான் எல்லாம். தண்ணி இல்லாம ஒண்ணும் முடியாது…”
அருவியென உருகொண்டு பரவுகிறார் அவர்.
 
என்னை எப்படி அம்மா என்கிறார் இந்த தாய்? என் சிரிப்பில் எப்படி அவரின் அம்மாவைக் கண்டார்? என் செருப்பில்? நடையில்…? எப்படி? எப்படி?
நினைவுகளை கடக்க இயலவில்லை.
 
என்ன என்று நின்று கேட்க யாருமற்ற வாழ்வில், சற்று நின்று அவரோடு பேசியதற்கும் காது கொடுத்ததற்கும் என்னை அன்பானவனாய் அர்த்தம் கொண்டிருந்திருப்பார் அந்தத் தாய்.
 
அப்படியானவராய்த்தானே இருந்திருப்பார் அவரின் தாயாரும்?
வாழ்வைத் தொலைத்த வாழ்வில் தாயைத் தொலைத்தோ அல்லது தாயைத் தொலைத்த வாழ்வில் வாழ்வைத் தொலைத்தோ வாழும் அவருள் அன்பென உறைந்திருக்கிறாள் தாய்.
 
அன்பு கண்டவள் தாயைக் கண்டாள்.
தாயைக் கண்டவள் நீரெனவானாள்
குடம் நிரம்பி வழியக்
கண்டேன் கண்டேன்.
நானும் கண்டேன்.
……………….
 
இரா. அரிகரசுதன் (2019)
Visited 26 times, 1 visit(s) today
Close
Translate »