சமூகம்
ஐம்பது வயதினனிடம்
கொடூரமான
நிதானத்தைக் கோருகிறது.
வெள்ளுடுப்பை
அதன் திமிர்த்தனத்தைக் கோருகிறது.
தன்னிறைவை
தோளுயரப் பிள்ளைகளை
கான்கிரீட் வீடொன்றையும்
கோருகிறது
சமூகம்
பாசாங்கின் ஆன்மீகத்தையும்.
உள்ளில் பகையெனினும்
உதட்டின் புன்னகையையும் நம்புகிறது.
நடிப்பெனினும் மரியாதை விளியையும்
கடனெனினும்
சுடரும் வாகனத்தையும்
கோருகிறது.
அறம்பிழைத்துப் பொருளியற்றா
எளியோனிடம்
சமூகம் சொல்வது இதுதான்..
சல்லிக்கும் விலையற்ற
நல்லுயிரி எவரேனுமிருந்தால்
நாற்பத்தொன்பதுக்குள் செத்துப்போ…
——
ஜெயாபுதீன்
