சரியாக வாசித்து புரிந்து கொள்ளப் படாத புத்தகம் சொற்களின் வெம்மை தாளாது
தன்னியல்பாக எழுந்து சூரியனை நோக்கிப் பறக்கத் துவங்குகிறது
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படைப்பாளி
ஒரு மழையைப் பொழியச் செய்கிறான்
சிறு நண்டுக்கு பயந்து பின் வாங்கும்
அலையை மீண்டும் மீண்டும் கரையை நோக்கிச் செலுத்துகிறது கடல்
பங்குனி உத்திரத்திற்கு வந்து படையலிட்டு
அருள் வேண்டியதாகச் சொல்லி தம்முடைய வருகையைப் பதிவு செய்தவர்களை விடுத்து
வராதவர்களைத் தேடி தன் குதிரையேறுகிறார் அய்யனார்
இருளகற்ற முழுநிலவு உலாவரத் துவங்குகிறது
——————
கடங்கநேரியான்