நான்வாழும் வரை முந்திகொண்டே வரும்
எனது வாழ்த்து
எனும் பிறந்தநாள் வாழ்த்தை படித்தபோது
கொழுப்பும் இனிப்பும்
மகிழ்ச்சியின் குறைவே என
சமீபத்தில் கண்ட முழு உடல் பரிசோதனை சொன்னதைத் தாண்டி பிறக்கிறது
ஓர் ஓரப்புன்னகை
அவர் அள்ளித்தந்த வாழ்த்துகளின்
எண்ணிக்கையும் கையளிக்கும் இலக்கியக் கடமையும்
கருங்கோழி அடித்துத் தின்ற உற்சாகத்தை
இரத்த நாளங்களில் பாய்ச்சுகின்றது
ஆயின் பிறந்தநாளன்று
திறக்கப்பட்ட மின்னஞ்சலுக்குள்
கிடக்கும் கடன்வங்கிகளின்
மகிழ்ச்சி வாழ்த்துகளும்
இன்சூரன்ஸ் நிறுவனங்களின்
உடல்நல வாழ்த்துகளும்
அப்படியே சிரிக்கின்றேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
போதையும் முரடுமாயினும்
குரலுக்கு செவிசாய்க்கும்
மாணவன் அனுப்பிய
தலைவா நீதானே காரணம் எனும்
வார்த்தைகளும்
மாணவிகளின் ஐயா
எனும் அன்பும்
பாலைவன பணியெனினும்
மறக்காமல் கிடக்கும் நட்புகளும்
ஆனந்தம்
அப்படித்தான்
ஞாபகங்களால் நிறைகிறது உடல்
ஞாபகம் கொண்ட நீராகவே வாழ்கிறேன்
மிதக்கிறேன் பாருங்கள்
மிதந்து மலையேறுகிறேன் பாருங்கள்
நல்ல வாழ்க்கைத்தானே
வாழ்ந்துவிட்டுபோகிறேனே..
நானும் சொல்லிக்கொள்கிறேன்
எனக்கே எனக்கான
ஒரு பிறந்தநாள் வாழ்த்தை,
பிறந்தநாள் வாழ்த்துகள் இவனே.
……..
இரா. அரிகரசுதன், 04.07.2022