- இரா, அரிகரசுதன்

கவிஞர் ஆலா எழுதிய கமுக்கம்(காதல்தொகை) எனும் இக்கவிதை தொகுதியில் கையெழுத்தாகவே கவிதைகளை எழுதி அப்படியே அதை நகலெடுத்து புத்தகம் வடிவமைத்திருக்கிறார்கள்.
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் மறந்து கொண்டிருக்கும் கிராமிய விளையாட்டுகளின் நிலைகளை படக்காட்சியாக காட்டியிருக்கிறார்கள். நம் விளையாட்டுகளான கண்ணாமூச்சி, குச்சியாட்டம், கொலகொலயா முந்திரிக்கா, கல்பாலீஜீ, செக்கு லாக்கு, சீப்பு சோப்பு கண்ணாடி, பம்பரம், கோட்டிப்புள், சடுகுடு, குதிரை சில்லு, சிலம்பம், பசசக்குதிரை தாண்டுதல் ஆகியவை அழகியலோடு பதிவாகியிருக்கின்றன.
முழுக்க முழுக்க காதல் கவிதைகளையே சுமந¢து வருகின்ற கமுக்கம். பிரிட்ஜூக்குள் இருக்கும் ஆப்பிள்களை காதலிக்கு உவமையாகக் கூறிக்கொண்டிருக்கும் கவிஞர்களுக்கு மத்தியில் “நாட்டுக்கோழி முட்டையாய் நல்ல சத்தாய் இருப்பது காதல்” என்று பேசுவது சுகம். இயற்கையோடு இயைந¢த காதல் மொழிகள் சுகமாகவே இருக்கின்றன.
“ உதிர்ந்து கிடக்கும்
கொடுக்காப்புளி சுளையைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
செவ்வரி ஓடிய உன்
வெள்ளை விழிகளை நினைக்கிறேன்
பட்டு இதழ் இமைகளை சட்டென்று மூடிக்கொள்
மைனாக்கள் கொத்திவிடப் போகின்றன
உன் சிகப்பேறிய விழிகளை”
இது உவமை மண்வாசம். இதையும் தாண்டி காதல்கவிதைகளில் கிராமியக் கலைகள், பாட்டி வைத்தியம் என்று அத்தனையையும் காக்கவைக்கச் செய்யும் முயற்சிகள் ஆச்சரியத்தை மூட்டுகின்றன.
சமுதாயத்தை சாக்கடையாக்க திட்டமிட்டு நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னை தொலைத்த வர்களை
“நக்கித் தின்னும் நாய்போல
கக்கித் தின்னும்
தொலைக் காட்சியில்
தன்னைத் தொலைத்துக் கொண்டவர்கள்”
என்று சாடி …
அங்கே பார் நமக்காக
மலரதூவி வைத்திருக்கிறது அந்த மரமல்லி
மரத்தடியில் நீண்ட நேரம் அமைதியாயிருப்போம்
அல்லது அதிக ஓசையோடு உரையாடிக் கொண்டிருப் போம்”
என்று தொலைக்காட்சி, திரைப்படங்களை தவிர்க்க அழைப்பு விடுப்பது சிறப்பு. கவிஞரின் சமுதாய அக்கறை நூல் முழுவதும் விரவியிருப்பது காண முடிகிறது.
“ கையால் அரைச்சி
வைச்ச மிளகாய்ச் சாந்தால் – ஆன
விரால்மீன் கொழம்பும்
சம்பா அரிசிச் சோறும்போல்
உம்மென்று இருக்கும் உன்னை பிடிச்சிருக்கு”
எனும்போது கிராமியத்தின் ருசி தெரிகிறது. இப்படியாக கிராமியம் கமழும் இந்தகக் காதல் தொகையாகிய கமுக்கம் உண்மையில் இயற்கைக் காதல்தான். ஆனாலும் கவிதைகள் உரைநடை களாகிப்போனதுதான் கவிதையின் அனுபவத்தினை உணராமல் போவதற்கு காரணமாயிருக்கிறது. பலசமூக அவலங்களை கவிதை காதலுடன் பேசிச் செல்வது ஆரோக்கியமானாலும் நிறைய தகவல்களை வைக்க வேணடும் என்று எண்ணி அவசரப்படு திணித்திருப்பது சற்று வருத்தமே. நூல் அருமை. கவிதையில் இன்னும் கவனம் இருந்திருந்தால் காதலை இயற்கையின் மணத்தோடு, கிராமியத்தின் தொடுதலோடு உணரவைத்திருக்கலாம்.
——————
இரா. அரிகரசுதன்
அனலி, ஆகஸ்ட் 2006 இதழில் வெளியானது