புது மண்டபத்தில் ஒரு தையற்கலைஞர் காலத்தை தைத்துக் கொண்டிருக்கிறார்
கிழிந்த துணியின் வழியே கசியும்
ஒளி அழகு மீனாளின் மூக்குத்தியை ஞாபகப்படுத்துகிறது
நைந்து போன வாழ்வுக்கு ஆறுதலாக சில சொற்களை மாடத்து புறாக்கள் உச்சரிக்கின்றன
ஏறெடுத்துப் பார்த்தவன்
அர்த்தநாரீஸ்வரரின் மார்பில் சாய்கிறான்
கல் கசிந்ததோ
இல்லாத வலது மார்பு சுரந்ததோ
யாருமறியார்
அமுதம் பருகும் போது கண் சொக்கித் தானே போகும்
கண்ணயற வந்த சொப்பனத்தில்
சல்லடமும் கச்சைக்குல்லாவும் அணிந்து
பந்தத்தை கைக்கொண்டு
கருப்பு நடக்க
சிற்பத்திலிருந்த குதிரை உயிர்க் கொண்டு வாகனமாக வந்து நிற்கிறது.
காவல் நாயின் குரைப்பொலி சூழ்நிலையைக் குலைத்து அனைவரையும் உசுப்புகிறது
——————
கடங்கநேரியான்
