முருக்கலூற்ற வானம்
கொட்டித் தீர்க்கிறது
கோடையின் கருணையை
அனலில் கருகி வெடித்துக் கிடந்த
நிலத்திற்கு
புதிதாய் உருவான பச்சையம் களிம்பு தடவுகிறது
ஆநிரைகளின் நாவுகள்
நீண்டு பசியமருகின்றன.
களங்கள் தேடிப் போய்ப் பாடி பரிசில் வாங்கி வந்த பாணன்
கருக்கலில் நிற்பதாக உணர்கிறான்
விடிவெள்ளி பூத்த திசை நோக்கி நடக்க நடக்க
கண்களை கூசச் செய்யும் வெளிச்சம்
பொருள் வயிற் பிரிந்த தலைவன்
தலைவிக்கு ஒரு கூடைப் பூவையும்
மகவுகளை நேரலையில் காண ஒரு திறன்பேசியையும் அனுப்பி விட்டு
நீராகாரம் அருந்தி வயிற்றைத் தடவுகிறான்
எங்கோ ” கோடை மேவிப் பொழிகிறது கருவூர்ப் புயல்”…
——————
கடங்கநேரியான்