அடுத்தடுத்த நொடிகளில் அற்புதங்களையும் அபத்தங்களையும் ஒரு இலையில் பறிமாறிவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது வாழ்வு .
இப்படியான வார்த்தைகளில் மயங்கி
அங்குமில்லாது இங்குமில்லாது இடைப்பட்டு நிற்கும் நேரம்.
வலுவிழந்து படுத்த படுக்கையாயிருக்க
கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகயாகி
காலக் கணக்கை நிறைவேற்றுகிறது
விதைத்த அத்தனையையும் அறுவடை செய்தாக வேண்டும்.
மனிதர்கள் வாக்கு தவறலாம்
கணக்குகள் ஒரு போதும் சமன்பாடு தவறியதில்லை
உழுவதற்கு ஒரு மழை
விதைப்பதற்கு ஒரு மழை
கனிவதற்கொரு மழை என
ஒவ்வொரு மழையும் அந்தந்த பருவதத்திற்காகத்தான்
மழை ஒரு போதும் தன்னை நிரூபிப்பதற்காகப் பொழிந்த தில்லை
மனிதர்கள் மட்டும் ஏன் தங்களை நிரூபிக்க
இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்
கடலலை வந்து அழித்துச் செல்லும் எனும் போதினும் தன்னுடைய பெயரை எழுதிப் பார்க்கும் குழந்தையின் குணம் வாய்த்தால் போதும்
இந்தக் கவிதையை அழித்துவிடுவேன்.
————————————————
கடங்கநேரியான் (18.03.2024)

மிகவும் சிறப்பான கவிதை.
நல்லவர்கள் யாருமே தம்மை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள் என படித்திருக்கிறேன் .நினைவு படுத்தும் வரிகள்.
குழந்தையின் குணம் வாய்த்தால் போதுமென நிறைவுற்று நம்மை .குழந்தைமைக்கு செல்ல உந்துகிறது
சிறப்பு