1
ஆசை ஆசையாய் வாங்கிய
ரயில் வண்டியின் தண்டவாளங்களை
இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட
ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்
தீர்ந்துவிட்டது பேட்டரி.
தீரா ஆசையுடன்
தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்னோன
நிகரனின் கனவில்
ஓடும் ரயிலுக்கு
நிறுத்தம் என்பதேயில்லை.
2
முதன் முதலில் கடல்பார்த்து
அலை மிரண்ட மெல்லினாக் குட்டி
கண்களைக் பொத்தி
கால்களை கட்டிக்கொண்டு பதறுகிறாள்
அஞ்சுபவளை அள்ளியெடுத்து
நெஞ்சு படர்த்தி
காதில் கிசுகிசுத்து
கரையில் இறக்கிவிட்டேன்
அச்சம் அவிழ்ந்து கரங்கள் நீட்டி
ஓடிச்சென்று அலையாடுபவளை
படகாக்கி
தாலாட்டத் தொடங்கியிருந்தது கடல்
தாயொருத்தி தன்மகவை
ஆரத்தழுவிக் கொஞ்சிக்கொண்டிருந்தது
கண்ணில் பட்டது.
நானும் இப்படித்தான்
கொஞ்சப்பட்டிருந்தேன்
————
சிவ.விஜயபாரதி